Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, October 8, 2017

அரசமரத்தடி நினைவுகள்

     கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது இந்த வலைப்பூவில் பதிவு எழுதி !  அதாவது படம் போடாமலில்லை ஆனால் பதிவுக்கு தகுந்த தகுதி  இருக்கிறதா என்று புரியவில்லை. அதனாலேயே  தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இனியும் காலம் கடத்தக்கூடாது என்ற ஒரே நோக்கோடு  இப்போது  பதிவிடுகிறேன்

புட்டபர்த்திக்கு செல்லும் வழியில்  லேபாக்ஷி கோவிலுக்கு   சென்றேன்.  எதிரில் பெரிய அரசமரத்தடியில்  இரண்டு  கறிகாய் விற்பவர்கள், வேறு சில பெண்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு தம்மளவில் உரையாடிக்கொண்டிருந்த  காட்சி, அங்கிருந்த கிராமிய சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. உடனே அதை அலை பேசியில் படம் பிடித்து  பின்னர் அதை கோட்டோவியமாக வரைந்து பார்த்தேன். அந்த பெரிய அரசமரத்தின் பரிமாணம்  அதனடியில் அமர்ந்திருப்பவர்களின் அளவைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். அது ஓரளவு  சரியாக வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.


இதையே  பின்னர்  டிஜிடல் வர்ணமுறையில்  வர்ணம் செய்ய முயற்சித்தேன். ஆனால் போட்டோஷாப் பழைய வெர்ஷன் ஆனதால் அடிக்கடி முரண்டு பிடித்து வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்தது. எனக்கும்  பொறுமை போய் முடிந்தவரைக்கும் போதும் என்று  வலையேற்ற துணிந்து விட்டேன்.

அதுவே நீங்கள் கீழே காணும் படம்.

லேபாக்ஷி கோவில் கர்நாடகா-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து சுமார் 150 கிமி தூரத்தில் உள்ளது.  அதன் வரை படங்களை இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.

மரங்களில் புனிதமாக போற்றப்படும் அரசமரம் எங்கும் வளரக்கூடியது. போதி மரம் எனப்படும் அரசமரத்தடியில்தான் புத்தருக்கு ஞானம் வந்ததாக சொல்வர். இதை அசுவத்த மரம் என்று விஷ்ணு ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.  விருக்ஷங்களில்  நான் அஸ்வத்தம் என்று கிருஷ்ணர் கீதையில் உரிமை கொண்டாடுகிறார்.
இந்த மரம் மட்டுமே இரவிலும்  கரிமலவாயுவை  எடுத்துக் கொண்டு ஆக்ஸீகரணம் செய்ய வல்லது.  காற்றிலுள்ள கரிமலவாயுவை மீண்டும் பிராணவாயுவாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது அரசமரம் என்று சொல்லப்படுகிறது. ஆயுர்வேதத்திலும்  அரசமரத்தின் பாகங்கள் பெரிதும் போற்றப்படுகின்றது

இயற்கையின் முன்னர் மானிடர் என்றும் சிறியவரே.


Saturday, August 13, 2016

சித்திரமும் மவுஸ் பழக்கம்-4


சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு பள்ளி மாணவர்களுக்கான கதைக்கு சித்திரம் வரைந்து கொடுத்தேன்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதே அதன் தாத்பரியம்.

தம்பி மீது அபாண்டமாக பழி சுமத்திய அண்ணனுக்கு  அன்றே பள்ளியில் ஒரு அபாண்டமான பழி வந்து சேர்கிறது. தாயின் அன்பு போதனையால் அண்ணன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறான். இது தான் கதை.

இதற்கான படங்களை ஒரு காமிக் ஸ்டிரிப் வடிவத்தில் கறுப்பு வெள்ளையில் வரைந்து அனுப்பிய பிறகு அதற்கு  ஃபோட்டோ ஷாப்-பில் வர்ணம் பூசி பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு புதியது அதனால் ஆர்வம் அதிகம். அதில் பல ஜித்தர்கள் whatsapp--ல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

இது வரை M S Paint-ல்  மட்டும்  கொஞ்சம் பழகியிருந்தேன். ஆனால் வித விதமான பிரஷ்கள், எளிமையான நுட்பங்கள், பல படங்களை ஒன்றாக்கி செய்யும் வித்தைகள் எல்லாவற்றையும் போட்டோ ஷாப்பில் செய்யலாம் என்று கேள்விப்பட்டு அதை ஒருவர் மூலம் என் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டேன்.

முதலில் கறுப்பு வெள்ளைப் படம் :


பின்னர் இதே படத்தை பிரித்து தனித்தனி படங்களாக  ஃபோட்டோ ஷாப் மூலம்  வர்ணம் பூசினேன். அதன் விளைவுஓவியம் வரையத் தெரியாது  ஆனால் நல்ல வர்ண ரசனை உண்டு     என்பவர்களுக்கும் கூடவே பொறுமையும் இருப்பவர்களுக்கு  இது ஒரு நல்ல தொழில் நுட்பம். குறிப்பாக விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு இதன் தேவை அதிகம் என்று நினைக்கிறேன்.  


( click the pictures  in larger size)

எனக்கு இதில் தென்பட்ட வசதிகள் என்ன வென்றால்  சுலபமாக  வேண்டாத பகுதிகளை வெட்டி எடுப்பது, எல்லைகளை குறிப்பிட்டு அதனுள் வர்ணங்களை நிரப்புவது,  வர்ணத்தை வெவ்வேறு அடர்த்தியில் பூச முடிவது போன்ற இவ்வசதிகள் MS Paint -ல் கிடையாது. கூடவே cloning smudging  போன்ற வசதிகளும் உண்டு.

ஆனால் ஒரு கிரேயான் அல்லது வர்ண பென்சில் துணையுடன் 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டிய காரியத்திற்கு மணிக்கணக்காக  மெனக் கெட வேண்டுமா என்று தோன்றுகிறது.

ஏதேனும் காரணத்தால் மூலப்பிரதி கெட்டுப் போயிருந்தால் அதை சீர்திருத்துவதற்கு இதைப் போன்ற மென்பொருட்கள் கண்டிப்பாக பயன்படும்.


Saturday, February 20, 2016

சீனத்துத் துரகம்

சுமார் பத்து வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஒரு சித்திரம்  பழைய புத்தகங்ளை புரட்டிய வேளையில்  கையில் அகப்பட்டது. ஹாங்காங் ஓட்டல்  அறையில்  பேஸ்டல் வர்ணத்தினால் வரையப் பட்டது. ஒரு சீனத்து பத்திரிக்கை  கை வினைத் தாெழில் பற்றிய விளம்பரம் ஒன்றின் படம் என்று நினைக்கிறேன்.


சீனாவின் சரித்திரத்தில் குதிரைகளுக்கு தனி இடம் உண்டு. கிமு 104 ல் வூ என்ற அரசன்  2000 மைல்களுக்கப்பால் படைகளை அனுப்பி சுமார் 3000 குதிரைகளை மத்திய ஆசியாவிலிருந்து பிடித்து வர செய்தான்.  அவைகளில் பாதிக்கும் மேலே வழியிலே இறந்து விட்டன. இந்த வெற்றியும் இரண்டாம் முயற்சியில் தான் கிட்டியது. உலகத்தில் குதிரைகளுக்கான    பாேர் இது ஒன்றுதானாக இருக்கும்.
குதிரையின் பெயரில் ஆண்டுகளுக்கு பெயரிடுகையில் ஒரு ஆண்டை ஒதுக்கி உள்ளனர் சீனர்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு Year of Horse ஆகும். இனி மீண்டும் 2026 ல் தான் அடுத்து வரும்.

இனி  குதிரைகளுக்கே உரிய சில விஷயங்கள்.

பிராணிகளிலே மிகப்பெரிய கண்கள் குதிரைகளுடையதாம். அவைகளால் தம்மைச் சுற்றி 360 டிகிரியிலும் பார்க்க முடியும்.

அவற்றின் ஆயுள் சராசரியாக 20 முதல்  25 ஆண்டுகள். ஆனால் அறுபது வயது வரை வாழ்ந்த குதிரைகளும் உண்டு.

அவைகளின் குளம்புகள் ஏற்பட காரணமாயிருக்கும் புரதங்களும் மனிதர்களின் நகங்களில் உள்ள புரதமும் ஒரே வகையை சேர்ந்தவை.

நின்று   காெண்டே தூங்கும் பழக்கமுடைய குதிரைகள் ஓட ஆரம்பித்தால் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் ஓட வல்லவையாகும்.

நம்பிக்கைக்கும் ஞாபக சக்திக்கும்  உடல் வலிமைக்கும் பெயர் வாங்கிய குதிரைகள் ஒரு வகையில் ஏமாளிகளும் கூட. அதனால் தான் சீனத்துக் கதைப்படி  தேவ லாேகத்து பெரும் ஆற்றை கடக்கும்   பாேட்டியில் ஏழாவது இடத்திற்கு அதுத் தள்ளப்பட்டது.

ஹும்  ! மனித உண்மைகள் பிராணிகளை காரணப் படுத்தி நமக்கு உணர்த்தப் படுகின்றன.

Monday, January 4, 2016

நம்பிக்கை தான் விளக்கு

2015 கழிந்து 2016 வந்தாயிற்று. சென்ற ஜுலை மாதம் தலையில் எதிர்பாராத ஒரு சிறு அறுவை சிகிச்சை. விளைவு , வலது கை பேனா அல்லது பென்சில் பிடித்து எழுதும் திறனைசற்று இழந்து விட்டது. கையெழுத்து கூட போட இயலாமை. நான் எழுதுவதை என்னாலேயே படிக்க முடியவில்லை. சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போலக் காணப்பட்டது. குடும்பத்தினருக்கு உடல் நலமானதில் மகிழ்சி. எனக்கோ பெரும் மனவாட்டம். ஓவியம் வரைய முற்பட்டாலும் அதே பிரச்சனை. சிறிய வளைவு சுளிவுகளுக்கு விரல்கள் ஒத்துழைக்க மறுத்தன. ஆனால் வேறு எல்லா செயல்களும் - சாப்பிடுவது, சட்டை அணிவது, தட்டச்சு செய்வது போன்றவை- எல்லாம் இயல்பாகவே நடந்தது. மருத்துவர் நாளடைவில் இந்தக் குறை சரியாகி விடும் என்று தைரியம் அளித்தார்.
தன் முயற்சியில் சற்றும் தளரா விக்கிரமன் போல நான் கணினி உதவியால் படம் வரைந்தேன். பயன்படுத்தப்பட்ட மென்பொருள் MS  Paint brush.

கைகளே இல்லாதவர்கள் வாயினாலும் காலினாலும் அற்புதமான ஓவியங்களை வரைந்து சரித்திரம் படைக்கும் கலாவிதர்களை போற்றி அவர்களால் உற்சாகம் அடையும் ஆண்டாக 2016 மலரட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Tuesday, December 22, 2015

வைனதேயம் பஜரே

வைனதேயன் என்பது கருடனுடைய வடமொழி பெயர். பறவைகளில் ராஜா. கருடன், கழுகு பருந்து என்று பல வகையான பெயர்களில் காணப்பட்டாலும் அவையாவும் ஒரே இனத்தவை.  ஆயிரம் அடி உயரே பறக்கும் போதும் பூமியில்  அவைகளின் பார்வை  இரைக்காக தம் கூரிய பார்வையால் தேடிய வண்ணம் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.  அவைகள் சராசரி ஒரு மணியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியன. ஆனால் இரையைக் கண்டவுடன் மணிக்கு 120 கிமீ.க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து கால்களினால் பற்றிக் கொண்டு பறந்து விடும். அவைகளின் கூரிய நகங்களின் பிடி மனிதர்களின் பிடியை விட பத்து மடங்கு பலமானது.

இப்பறவைகள் எந்த ஒரு இறந்த சடலத்தையும் உணவாக் கொள்ளுபவை. அதனால் சுற்று சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய இடத்தை வகிப்பனவாகக் கருதப்பட்டு அவைகளின் பாதுகாப்பிற்காக பல நாடுகளும்  நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் கருடனை பூஜித்து வந்தனர் போலும்.
சரி, ஓவிய வி ஷயத்திற்கு வருவோம். இந்தப் படம் வரைய பயன் படுத்தப்பட்ட பென்சிலின் நுனி உளி போன்று தட்டையானது. இதை flat tip என்று சொல்வதுண்டு. இதன் பயன், விளிம்புகள் அழுத்தமாகவும்  உட்பக்கங்கள் சற்று அழுத்தம் குறைந்தும் இயற்கையாக ஔிப் பரவலை ஒரே கோட்டில் ( stroke ) வெளிப்படுத்தும். இதனால் தனியாக shading செய்ய வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக அலகு, இறக்கை போன்றவையெல்லாம் ஒரே stroke ல் வரையப்பட்டவைதாம்.
குறிப்பு : பென்சில் கூராக இருந்தாலும் அதை சாய்த்து வரைபட தாளிற்கு இணையாக பிடித்தும் இதே மாதிரி வரையலாம்.

இந்த பதிவு முழுவதுமாக ஆன்டிராய்ட் கைப்பேசி மூலம் சுட்டு,  தட்டச்சு செய்யப்பட்டு வலையேற்றப் பட்டது. படம் வரைவதற்கான நேரம் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவு.  தட்டச்சு செய்து வலையேற்றுவதற்கான நேரம் சுமார் இரண்டரை மணிகள்!

Sunday, January 11, 2015

ஒளி - நிழல் விளையாட்டு

இந்த ஒளி -நிழல் விளையாட்டில் அடிக்கடி மனம் இழப்பவன் நான்.  நேற்று அலுவலகத்தில் கணிணியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவன் தற்செயலாக  கண்களை விலக்கி எதையோ எடுக்கப் போன எனக்கு சட்டென்று கண்ணைக் கவர்ந்தது மேசை மேல் என் மூக்குக் கண்ணாடி.  அது சன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சத்தில் காட்டிய நிழலாட்டத்தைத் தான் கீழே காண்கிறீர்கள்.

பள்ளிகூடப் பாடத்தில், ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்தில் ஒளி பாயும் பொழுது  ஏற்படும் ஒளி விலகல் ஒளிச் சிதறல் போன்றவற்றைப் படித்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் ஒரு சேர கண்டபோது விஞ்ஞானம் வெளிவரவில்லை. உள்ளே இருந்த ஓவியன் வெளிவந்தான். அதை அப்படியே சில நிமிடங்களுக்குள் பிடித்துவிட வேண்டும் என்று கைகள் பரபரத்து வரையப் பட்ட சித்திரம் இது.

ஃபிரேம், அதனுடைய நிழல் இரண்டும் வெவ்வேறு வகையில் விலகி செல்கின்றன.   நிஜத்தில் இரண்டு பக்க வளைவுகளும் வெவ்வேறு உயரத்தில் விலகி இருப்பினும் நிழலில் அவையிரண்டும் சங்கமித்திருக்கின்றன. அதைப் போலவே   பொதுவாக நாம் டிரான்ஸ்பரண்ட் என்று கருதும் லென்ஸின்   ரீடிங் லென்ஸ் விளிம்புகள் நிழலில் கருப்பாக அரைவட்ட வடிவில் (வெளிச்சத்தை அனுமதிக்காது) இருக்கிறது. ஆனால் கண்ணாடியின் நுனிப் பகுதி அதிக வெளிச்சச் சிதறலை உண்டாக்கி ஒரு ஒளிவட்டத்தை  ஏற்படுத்தி இருப்பதைக் காணலாம். ஃபிரேமும் நிழலும் லென்ஸின் வழியே பார்க்கப்படும் போது ஒளி விலகலால் நேர்கோடாக இல்லாமல் துண்டித்து இருப்பன போல் காணப்படுகின்றன.

படத்தை அலைபேசியில் படம் பிடித்து போட்டிருக்கிறேன்.

பல பெரும் ஓவியர்கள் தண்ணீர் துளி,  கண்ணாடி ஜாடி போன்றவற்றை மிக தத்ரூபமாக வரைந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இது எனது முதல் முயற்சி. புது வருடத்தில் புதிய முயற்சியும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று தானே !
வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.


Friday, October 24, 2014

க்ரேயான் குமரன்

தீபாவளி என்கிற பெயர் சொல்லி நாலு நாள் தொடர்ந்த விடுமுறை.  என்ன செய்யலாம்னு பார்த்த போது கண்ணிலே பட்டது சண்முகனுடைய வரைபடம்.  ஒரு கதைக்காக நான் வரைந்த ஒரு பென்சில் படத்தை சில மாதிரி பிரிண்ட் போட்டுப் பார்த்து பின் ஒதுக்கப்பட்ட ஒரு A4 தாளில் இருந்த முருகன் ’அருள்’ என் கவனத்தைக் கவர்ந்தது. அதற்கு வர்ணம் தீட்டினால் சண்முகன் எப்படி இருப்பான் என்று பார்க்கும் ஆவல் மேலிட்டதால் வர்ணப் பென்சில்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. க்ரேயான் வர்ணக் கட்டிகள் சில கிடைத்தன.  க்ரேயான் வர்ணத்தில் அதிகம் ஆர்வமில்லாதவன் நான். ஏனெனில் அதில் தவறு வந்தால் ’அழிப்பானால்’(eraser) சரி செய்ய இயலாது. ஆனாலும் வேறு வழியில்லாமல் பொழுது போக்குவதற்காக அவற்றைக் கொண்டே ஆரம்பித்தேன்.
இந்த நிகழ்ச்சி அகல்கோட் மஹராஜ் என அழைக்கப்படும் சுவாமி சமர்த்தரின் மகிமையை குறிக்க வந்ததாகும். ராமாசாஸ்திரி என்ற பக்தருக்கு ஒரு கார்த்திகை பௌர்ணமியன்று சாட்சாத் சண்முகனாகவே காட்சி தந்து அருள் பாலித்ததை குறிக்க வந்தது. ஒரு கரம் இடுப்பிலும் மற்றொரு தூக்கிய அபயத் திருக்கரமும்  சுவாமி சமர்த்தரின் புகழ் பெற்ற படங்களில் ஒன்று. அதை அந்த அடிப்படையிலேயே சண்முகனின்  பன்னிரு கரங்களில் இரண்டு கரங்களை வரைந்தேன்.  அந்த ஒற்றுமையைக் காட்ட பின்ணணியில் அவருடைய புகைப்படம் ஒன்றை வித விதமாக பொருத்திப் பார்க்க விழைந்து சில பிரிண்ட் எடுத்ததால் வந்த வ்ரைபடம் தான் இது. அவருடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் அழுத்தமான நிழல் காரணமாக குமரனின் சில கைகளின் வரை பகுதி பாதிக்கப்பட்டதால் இந்த படத்தை தள்ளி வைத்தேன். இப்போது வர்ணம் பூசிப் பார்க்கப் பயன் பட்டது.

சுவாமி சமர்த்தரைப் பற்றிய சில குறிப்புகள்:
இவர் சிரடி பாபாவின் சம காலத்தவர். ஆங்கிலேய அரசாங்கம் இவரை அதிக அளவில் மரியாதையுடன் நடத்தியது. அதனால் கோடக் புகைப் படக்கருவி தயாரிப்பாளர்களால் முதன் முதலாகப் புகைப்படத்தில் தோன்றிய துறவி இவரே என்று கூறுவர். இதைப் பற்றி மிக்க சுவாரசியமான கதையைப் படிக்க இங்கே  சுட்டவும்.  திருவண்ணாமலை இரமணரைப் போல இவரும் கோவணதாரி. பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து போய் கொண்டிருந்தார்கள். இவர் செய்த லீலைகளுக்கு அளவே இல்லை.  தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் இவர் மஹாராஷ்ட்ராவில் 1878-ல் அகல்கோட்  என்ற ஊரில் மஹாசமாதி அடைந்தார்.