Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, January 17, 2008

கல்லிலே கலைவண்ணம் கண்டான்

சமீபத்தில் கர்நாடகத்தில் உள்ள பேலூருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நாட்களுக்கு முன் அங்கிருக்கும் சிற்பம் ஒன்றை சித்திரமாக வரைந்திருந்தேன்.அந்த சிற்பத்தைத் தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். சிவனும் பார்வதியும் ஒயிலாக இடுப்பை வளைத்து நிற்கும் அந்த படத்தை பத்து வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் பார்த்த போது வரைந்தது இது. பேலூரில் இருக்கும் நூற்றுக்கணக்கான கண்கவரும் சிற்பங்களில் இதுவும் ஒன்று.

ஹொய்சள மன்னர்களின் இந்த மாபெரும் முயற்சியின் முன்னால் பல்லவர்களின் மாமல்லபுர சிற்பங்கள் மிக சாதாரணம். ஒருவகையில் இந்த ஒப்புமை பொருந்துமா என்பது சந்தேகமே.மாமல்லபுரம் குடைவரை கோவில்கள் எனப்படும் வகையை சேர்ந்தன. பாறையை குடைந்து செய்யப்பட்டன. வெட்டுதல் உண்டு, ஒட்டுதல் கிடையாது.

அதிகம் அறியப்படாத, நான் பார்த்த இன்னொரு குடைவரை கோவில் புதுக்கோட்டை அருகே இருக்கும் திருமயம் பெருமாள் கோவில்.அரங்கநாதர் என்று நினைவு.மேலே கோட்டை,கீழே கோவில். உண்மையிலேயே மிக அழகான அமைதியான கோவில் அது. வருமானமில்லாத ஏழை ரங்கநாதர்,பாவம்.

பேலூர் சிற்பங்களின் சிறப்பிற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.பேலூர் ஹளேபீடு-ல் பயன்படுத்தப்பட்ட கற்களை மிருது பாறைகள் (soap stones)என்று சொல்கின்றனர். ஆகவே அதில் நுணுக்கமான வேலைப்பாடுகளை சுலபமாக செய்ய முடியும். அதுவே கடினப் பாறைகளாகி விட்டால் சிற்பிகள் மிக அதிகமான பொறுமையுடன் வேலைத்திறனைக் காட்ட வேண்டியிருக்கும்.பெரும்பாலான தமிழக கோவில்களில் காணப்படும் சிற்பங்களும் granite எனப்படும் கடினப்பாறை வகையை சேர்ந்தது.மீனாட்சி அம்மன் கோவில்,ஆவுடையார் கோவில் சிற்பங்களை கண்டவர் நம்மூர் சிற்பிகளையும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.



மேலே உள்ள படம் இண்டியன் இங்க் உபயோகித்து வரையப்பட்டது. இதற்கு ஸ்டீல் பென் எனப்படும் நிப் மட்டும் உள்ள பேனாவில் தொட்டுத் தொட்டு வரைய வேண்டும். வரைந்து முடிக்கும் வரையில் இங்க் புட்டி திறந்தே வைத்திருக்க வேண்டும். ஓரிரு முறை கவிழ்ந்து பேப்பரும் படமும் சட்டையும் கறுப்பாக அலங்கோலமானதும் உண்டு. இதனாலேயே இதை விட்டு விட்டேன். வசதி என்னவென்றால் மை காய்ந்த பிறகு தண்ணீர் விழுந்தாலும் மை கரையாது.
மூல சிற்பத்தின் புகைப்படம் இதோ :

Wednesday, January 2, 2008

ஓ ! மானே ..மானே ..மானே........

கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு அடுத்த படியாக சுலபமான பயிற்சி வர்ண பென்ஸில்கள் தான். என் மனதில் எப்போதுமே இந்த கலர் பென்ஸில்களைப் பற்றி ஒரு அலட்சியம். அதெல்லாம் வெறும் ஸ்கூல் பசங்களுக்கான வெளயாட்டு. நாம தான் பெரும் ஆர்டிஸ்ட் ஆச்சே. பிரஷ் இல்லாமே ஆர்ட்டா?

அந்த அலட்சியத்திற்கு இன்னொரு காரணம் நான் எதிர்பார்க்கும் வர்ண அழுத்தம் அதில் கிடைக்காமல் போவது தான்.

அதென்ன வர்ண அழுத்தம் ?

அதாவது சட்டம் போட்டு வைத்தால் குறைந்தது பத்தடி தூரத்திலிருந்து கண்ணைக் கவர்வதாக இருக்க வேண்டும். இது நானாகவே மனதில் வளர்த்துக்கொண்டஒரு எதிர்பார்ப்பு. கலர் பென்ஸில் சமாசாரமெல்லாம் மூன்று அல்லது ஐந்தடிக்குள்ளாக இருந்து பார்த்தால்தான் ஓரளவு முழுவிவரமும் தெரியும். இதனாலேயே இதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தேன்.

ஆனால் வலையுலகம் தன் கதவுகளை திறந்த பின்பு தான் புரிந்தது கலர் பென்ஸில்களால் முடியாத காரியமே கிடையாது என்பது. பெரிய பெரிய ஜாம்பவான்களின் கைத்திறனைப் பார்த்ததும் உடனே போய் வாங்கினேன் ஒரு கலர் பென்ஸில் பெட்டி. அதிலும் மிக காஸ்ட்லியான Faber-Castell நூத்தி ஐம்பது ரூபாய் கொடுத்து! ஏன்னா அவங்க அதைத்தானே பயன் படுத்தறாங்க!! அதையும் தான் பார்த்துடலாமே.

அப்படி உருவான முதல் சித்திரந்தான் இந்த மான் படம்.



இதை வரையத் தூண்டியது அதன் வளைந்து மேலேறும் கொம்புகளின் வரிகள், அதில் தெரியும் முப்பரிமாணம், மூக்கு நுனியில் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு’, அதன் தீர்க்கமான பார்வை இப்படி பல. சுமார் ஒருவார காலம் நேரம் கிடைக்கும் போதெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக செய்து முடித்தேன்.

கடைசியாக செய்த தவறு அதை கொண்டு போய் லேமினேட் செய்தது. யார் சட்டம் போடுவதற்கு இருநூறும் முன்னூறும் செலவழிக்கிறது :(

லேமினேட் செஞ்சா ரொம்ப சீப். அறுபது ரூபாய்ல வேலை முடிஞ்சுரும். கண்ணாடி உடையும் பயமும் கிடையாது இப்படியெல்லாம் கணக்கு போட்டு லேமினேஷன் போர்டு மவுண்டிங் ஆர்டர் பண்ணியாயிற்று.

இரண்டு நாள் கழித்து வாங்கி வந்து பார்த்தால் உடைந்து போனது என் மனது. பளிச்சென்று இருந்த படம் லேமினேஷனுக்குப் பிறகு மங்கிப் போய் கிடந்தது. காரணம் சரியாகத் தெரியவில்லை. ஃபோட்ட கடைக்காரன், தில்லியில், ஒரு ஞான சூனியம். அவன் வெறும் ஏஜென்ட். லேமினேட் செய்யும் இடம் வேறெங்கோ. ஒரு சிலர் லேமினேஷனில் பயன்படுத்தப்படும் ரஸாயனத்தினால் என்றனர். இன்னொருவர் லேமினேஷன் செய்யும் போது உண்டாகும் சூட்டினால் ஆகியிருக்கும் என்றார். வெறும் இது மட்டுமல்ல இதனோடு கொடுக்கப்பட்ட பேஸ்டல் வர்ணப் படைப்புகளின் கதியும் அப்படியே. ஆனால் அவைகள் இதைவிட கொஞ்சம் பரவாயில்லை.

உங்களுக்கு யாராவது லேமினேஷன் யோசனைக் கொடுத்தால் தீர விசாரித்து முடிவெடுக்கவும். என் கண்ணான கலைமானுக்கு வந்த கதி வேறு எதற்கும் வந்து விடக்கூடாது.