Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, February 19, 2008

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......

உலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வர்மா இதனை புகுத்தியதன் மூலமாகத்தான் நமது தெய்வங்களுக்கே ஒரு பொலிவும் புது மவுசும் வந்தது.

சித்தன்ன வாசல் குகை ஓவியங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. ஆயிரம் ஆண்டுகளானாலும் வர்ணங்கள் மங்காமல் இருக்கும் முறையை அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே சாந்து தயாரித்து உபயோகித்துள்ளனர் என்பதை எண்ணும் போது பெருமையாக இருக்கிறது. ஆனால் அந்த தொழில்நுட்பம் என்ன ஆனது?

நான் முதன்முதலில் எண்ணெய்-வர்ணப் பெட்டி வாங்கியது கல்லூரி முடித்த பின்னரே.அதுவரையில் வெறும் நீர்வண்ணக் கலவைதான். சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்” என்ற வகையில் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் கலப்படமில்லா தேங்காய் எண்ணெய்,நீருக்குப் பதிலாக.தூரிகையை அதில் ஒரு முக்கு முக்கி பின்னர் நீலவர்ணத்தை துளியூண்டு ஒரு பீங்கான் தட்டில் பிதுக்கி,நன்றாக குழைத்து ஆகாயத்தின் நீலவர்ணத்தை பூச ஆரம்பித்தேன். அதற்கென்றே ஒரு தனி வரைதாள். இரண்டு நாட்கள் ஆனாலும் எண்ணெய் காய்வதாய் காணோம். நீர்-வர்ணமானால் பத்து நிமிடத்தில் காய்ந்து அடுத்த பகுதியை பூச ஆரம்பித்து விடலாம்.ஆனால் அந்த எண்ணெய் ஊறிப் போய் வரைதாளின் பின்புறமெல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது.

ஓஹோ இந்த ரூட் சரியில்லை என்பதை புரிந்து கொண்டு பிதுக்கிய வர்ணங்களை நேரடியாகவே-தூரிகையின் நுனியில் மட்டும் சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு பரப்பத் துவங்கினேன். ஓரளவுக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்ததது. முதலில் வரைந்தது மேக மண்டலத்தின் நடுவே கிருஷ்ணன் குழல் ஊதுவது போல ஒரு படம். ஆரம்பத்தில் செய்த தவறு காரணமாக அது முழுவதும் காய்வதற்கு எடுத்துக் கொண்ட காலம் ஆறு மாதங்களுக்கு மேலே. எத்தனையோ வருடங்கள் அதை பாதுகாத்து வைத்திருந்தேன். இப்போது எங்கே என்று தேட வேண்டிய நிலை. கிடைத்தால் வலையேற்றுவேன்.

அதன் பின்னர் பல படங்கள் வரைந்து வேண்டியவர்களுக்கு பரிசாகக் கொடுத்து வந்தேன். காலப்போக்கில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கையில் நிற்கவில்லை, இந்த நாயைத் தவிர.



இது கணிணியில் கண்ட ஒரு 'ஸ்க்ரீன் ஸேவர்' நாய். அதன் கண்களில் தெரிந்த ஒரு சோகம் அல்லது தனிமை மனதை மிகவும் தொட்டது. அந்த உணர்வை தூரிகையில் கொண்டு வரச் செய்த முயற்சிதான் இந்த ஓவியம்.

இது தொலைந்து போகாததற்கு ஒரு காரணம் இதை வரைதாளில் செய்யாமல், வெள்ளை காலிகோ ஒட்டப்பட்ட அட்டையின் மேல் செய்யப்பட்டது. இது எல்லா ஆர்ட் ஸ்டோரிலும் கிடைக்கும். Canvas Board என்று கேட்டால் கிடைக்கும். அதிலும் பல அளவுகள் உண்டு. இந்த ஓவியம் 25 X 30 cm அளவிலானது.

ஓவியத்தை முடித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் மேல் வார்னீஷ் தேய்த்து விட்டால் அதை நீண்ட காலம் பாதுகாக்கலாம். இந்த படம் சுமார் எட்டு வருடங்கள் பழையது.

8 comments:

பாச மலர் / Paasa Malar said...

அருமையான ஓவியம்...

KABEER ANBAN said...

வாங்க பாசமலர். கொடுக்கும் ஊக்கத்திற்கு நன்றி.

துளசி கோபால் said...

படம் அருமையா இருக்கு.
எனக்கு ஒரு பூனை வரைஞ்சு கொடுங்களேன்.

தனிமடலில் பூனை போட்டோவை அனுப்பவா?

KABEER ANBAN said...

ஆஹா, எனக்கு ஒரு விசிறி கெடச்சுட்டாங்கப்பா!
///எனக்கு ஒரு பூனை வரைஞ்சு கொடுங்களேன். ///
தங்கள் சித்தம் என் பாக்கியம்! நல்ல ஒளி நிழல் பயன் படுத்தி போட்டோ எடுத்தால் வரைவதற்கு ஸப்ஜெக்ட் நல்லா இருக்கும். உங்களுக்கு சொல்லணுமா!. என் தனி மின்னஞ்சலை கபீர் வலைப்பக்கத்து profile-ல் காணலாம்.

துளசி கோபால் said...

நன்றிங்க.
தனி மடலில் சில படங்களைத் தேடி அனுப்பறேன்.
அதுலே இருந்து தெரிவு செய்யலாம்.

சதங்கா (Sathanga) said...

உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி. நாய் அருமையாக வந்திருக்கிறது.

அப்படியே ஒரு எட்டு என் சித்திரங்களையும் வந்து பாருங்கள். இப்ப தான் வலையேற்ற ஆரம்பித்திருக்கிறேன் ...

http://sithiram-pesuthadi.blogspot.com/

Priya said...

வாவ்... ரொம்ப நல்லா வந்திருக்கு!

KABEER ANBAN said...

நன்றி ப்ரியா