Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, April 30, 2008

கபிலா, கொக்கா !

சென்ற பதிவில் பேஸ்டல் வர்ணங்கள் பற்றி சிறிது சொல்லியிருந்தேன். மிக அற்புதமான உபகரணம் ஆயினும் எனக்கிருந்த சின்ன பிரச்சனை இடையிடையே படத்தை சரி செய்துகொள்வதில் ஏற்பட்ட சிரமங்கள்தான்

அதாவது அழிச்சு அழிச்சு திரும்ப வரைஞ்சு சரி செய்யணும். ஆயில் வர்ணம் ஆனால் நன்றாக காய விட்டு திருத்த வேண்டிய பகுதி மேல் சுலபமாக மீண்டும் வேண்டிய வர்ணத்தை அப்பி
சரி செய்து கொள்ளலாம்.பேஸ்டலில் என்னதான் அழித்துவிட்டு பின்னர் அதன் மேல் பூசினாலும் பழைய வர்ணத்தின் தாக்கம் சற்று தெரியத்தான் செய்தது. அது சில சமயம் படத்தின் அழகை கெடுத்துவிடக் கூடும் !

இதை எப்படி தீர்ப்பது என்று யோசித்தபோதுதான் “கண்டு பிடித்து விட்டனர் விஞ்ஞானிகள்” என்ற விக்ஸ் விளம்பரம் போல் உதித்தது ஒரு ஐடியா ! அந்த முறையில் வரைந்தது தான் கீழே உள்ள படம். பலரும் கபில்தேவ் என்று அடையாளம் கண்டு விட்டார்கள். உங்களுக்கும் அதில் கருத்து வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.




இங்கே நான் பயன்படுத்திய ஐடியா,முதலில் படம் முழுவதையும் பேஸ்டல் வரைதாளில் கலர் பென்ஸில்களை கொண்டு வரைந்து விடுவது. கலர் பென்ஸில்களின் வரைவை சுலபமாக அழித்து திருத்த முடியும். கிட்டத்தட்ட 80 சதம் படம் முற்றுப் பெற்றுவிடும். உங்களுக்கு முழு திருப்தி வந்த பின்னர் பேஸ்டல் வர்ணங்களைக் கொண்டு அதன் மேலேயே தேவைகேற்றபடி அழுத்தம் கொடுத்து மீண்டும் வரையவும்.

இப்போது மங்கலான கலர் பென்ஸிலின் வர்ணங்களை விட பேஸ்டல் வர்ணங்கள் பளிச் என்று தெரிய ஆரம்பிக்கும். தேவையானால் சில பகுதிகளை, ஷேடிங்-கை அனுசரித்து,பென்ஸில் கலர்களிலே விட்டு விடலாம். முடித்த பின்னர் கிட்டத்தட்ட ஆயில் வர்ணங்களைப் போலவே எடுப்பாக இருக்கும்.

கூடுதல் வசதி என்னவென்றால் நுணுக்கமான கண் போன்ற பகுதிகளை வரையும் போது இந்த யுக்தி நன்றாக பயன்பட்டது.

இப்படி வெவ்வேறு இனத்தை சேர்ந்த வர்ணங்களை கொண்டு வரைவதை மிக்ஸ்ட்-மீடியா என்பார்கள். இவைகளை சுத்த பென்ஸில்காரர்களும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள், பேஸ்டல்காரர்களும் தள்ளி வைப்பார்கள். சுத்த கர்னாடக ச்ங்கீதமும் இல்லை, ஹிந்துஸ்தானியும் இல்லை. சினிமா பாட்டு போல ரெண்டும் கெட்டான்.

படத்தைப் பார்த்த நண்பர் கொடுத்த ஒரு கமெண்ட்: ”கபிலுக்குத்தான் கழுத்தே கிடையாதே, நீ என்ன இவ்வளவு நீளமா வரைஞ்சிருக்கே”

நான் சொன்னேன் “கபிலா கொக்கா !”

Thursday, April 24, 2008

இந்த புலியும் நீர் குடிக்குமா ?

Pastels எனப்படும் வர்ணக் கட்டிகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை.வர்ணப் பென்சில்கள் போலல்லாது இவற்றில் வர்ண அடர்த்தி அதிகம். கிட்டத்தட்ட ஆயில் வர்ணங்களின் அடர்த்தி கிடைக்கும். பேஸ்டலுக்கு தூரிகைகளின் அவசியம் இல்லை. இதனால் பல இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இதனை போற்றுபவர்கள் கூறும் காரணம் எத்தனை வருடங்கள் ஆனாலும் வர்ணங்கள் மங்காமல் புதுபொலிவுடன் இருக்கும் என்பதுதான்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி படித்தபின்னர், சரி இதையும் தான் பார்த்து விடுவோமே என்று இருபத்தி நான்கு வர்ணங்கள் உள்ள ஒரு பெட்டியை வாங்கிவந்தேன்.பார்ப்பதற்கு குழந்தைகளுக்கு தரும் plastic crayon போலவே இருந்தது. முதல் முயற்சி ஒரு பஞ்சவர்ணக் கிளி. அதை ஆரம்பித்து விட்டு முழி முழி யென்று முழித்தேன். ஏனெனில் அதில் வர்ணக்கலவைகளை பெறுவதற்கு ஒன்றின் மேல் ஒன்றாக செய்து கொண்டு போக வேண்டுமாம். அதை ஒரு சாதாரண வரைதாளில் வரைய ஆரம்பித்து விழி பிதுங்கிவிட்டது.வர்ணங்கள் பூசுவதில் சற்று முன் பின் ஆகிவிட்டால் சரி செய்வது மிகக் கடினமாக பட்டது. அளிப்பான் கொண்டு அளித்து விட முயன்றால் தாளுடன் பிடிமானம் அதிகமாகி மேலும் உறுதியாக தாளில் பரவிக் கொண்டது.

பேஸ்டல்களுக்கென்றே தனியாக ஒரு வரைதாள் உண்டு. அது சற்று சுர சுரப்பாக இருக்கும். இதை tooth அல்லது grain என்று கூறுவார்கள். அப்படி இருந்தால்தான் வர்ணத்திற்கு பிடிமானம் இருக்கும்.உதிர்ந்து விழாமல் இருக்குமாம். நான் எப்போதும் படுக்கை வாட்டில் வைத்து வரைவதால் உதிர்ந்து விழும் என்ற கவலை வரவில்லை.:))

எப்படியோ கிளியை (இப்போ கணிணி பிரதி இல்லை. கிடைத்ததும் வலையேற்றுகிறேன் ) ஒரு வழியாக முடித்து பேஸ்டல் வரைதாளை வாங்கி வந்தேன். அதில் அடுத்ததாக ஒரு வரிப்புலியை துவக்கினேன்.



இதில் மூன்று வர்ணங்களே பிரதானமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆரஞ்சு,ப்ரௌன் மற்றும் கறுப்பு. இதில் முக்கியமாக வரைய விரும்பியது புலியினுடைய வரிகள், நீரில் காணும் பிரதிபலிப்பு. 2004-ல் வரைந்தது. லேமினேஷன் செய்து கொஞ்சம் மங்கிப் போன படத்தில் இதுவும் ஒண்ணு.

படத்தை முடித்த பிறகு பார்த்த என் பெண் சொன்னது “இதுக்கு தண்ணி குடிக்கிறதுல இண்ட்ரெஸ்ட் இல்ல போலிருக்கே. குடிக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுது”

உங்களுக்கு என்ன தோணுது?

Tuesday, April 8, 2008

கண்ணார கண்டேன் என் கண்ணனை

காணாமல் போயிருந்த கிருஷ்ணன் படம் கிடச்சிருச்சு. போன பதிவுல 'கிடைத்தால் வலையேற்றுவேன்' என்று சொன்னேன் இல்லையா அந்த கிருஷ்ணரத்தாங்க சொல்றேன். மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரியெல்லாம் இல்லே. ஒரு ஸ்கூல் குழந்தை போட்ட படம் மாதிரிதான் இருக்குன்னாலும் அதுக்கு பின்னாடி இருக்கிற செண்டிமெண்ட் பாருங்க அதுதான் அடிச்சுக்குது. என்னோட முதல் ஆயில் பெயிண்டிங் ஆச்சே!

ராஜீவ் காந்தி நினைவகத்தில அவரு நர்சரில போட்ட ட்ராயிங்கெல்லாம் எல்லாரும் பார்க்கிறதுக்காக வைச்சிருக்காங்கன்னா காரணம் செண்டிமெண்ட்தாங்க. அதனால நம்ம வீட்டு குழந்தைங்க போட்ட படத்தையெல்லாம் தூக்கி போட்டுடாதீங்க. எந்த புத்துல எந்த பாம்பு
இருக்குமோ யாரு கண்டா! இன்னொரு கலாமோ ஆனந்தோ அவங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கலாம். அவங்களே தீர்மானம் பண்ணி தூக்கி போடற வரைக்கும் பாதுகாப்பா வச்சிருந்து குடுத்துடுங்க.நம்ம கடமை முடிஞ்சுது.

எப்படி கெடச்சதுன்னு சொல்லலையே. ஒரு மாசமா ஊரு மாத்திப்போற காரணத்துல எல்லாத்தையும் இழுத்துப்போட்டு பெரட்டி,மாத்தி பாக்கிங் பண்ணும் போது “கண்ணாரக் கண்டே உடுப்பி கிருஷ்ணனா ” KV. நாரயணசாமியெ பாட்டு பாடச் சொல்ற ஒரு சந்தோஷம்.

ஆயில் பேப்பர் ரொம்ப பழசா போயி இங்கேயும் அங்கேயுமா டேமேஜ். ஓரங்களெல்லாம் நைந்து பொடியாகி விழுகிற ஒரு ரிஸ்க். ஜாக்கிரதையா ஸெல்லோ டேப் ஒட்டி ஸ்கேன் பண்ணி பத்திரப் படுத்தினப்புறம் தான் திரும்பவும் பாக்கிங் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

இப்போ மைசூர் வாசி. எவ்வளவு நாளைக்குன்னு தெரியாது. இன்னும் ப்ராட் பேண்ட் வரவில்லை. கை ஒடிஞ்ச மாதிரிதான் இருக்கு.

பதிவுகள் எதையும் படிக்க முடிவதில்லை. 38.6 kbps வேகத்துல என்னன்னு பிரிக்கிறது படிக்கிறது. ஒரு பதிவு திறப்பதற்கு 15 நிமிஷமாகுது :(

மைசூர் வந்த கையோட இன்னொரு ஸர்ப்ரைஸ். நமது உறவினர் வீடுகளுக்கெல்லாம் ஒரு மரியாதை நிமித்தம் ஹலோ சொல்ல போயிருந்தோம். அப்ப ஒரு வீட்டுலே நான் எந்த காலத்திலோ அவங்களுக்கு வரைஞ்சு குடுத்திருந்த ஒரு சிறுத்தை படத்தை எடுத்து காண்பித்தார்கள். அட! இப்படி ஒண்ணு வரஞ்சிருந்தேனா ? எப்போ ? அப்படீன்னு முடியை பிச்சுக்கிற மாதிரி ஆயிடுச்சு. சுமார் இருபது வருஷத்துக்கு முந்தி அவங்க வீட்டுல ஒரு அரைநாள் தங்கும்படி ஆச்சு. அப்போ வரஞ்சுதாம். படம் கிருஷ்ணர் அளவுக்கு நைந்து
போகாமல் ஓரளவு நல்ல கண்டிஷன்-ல இருந்ததற்கு அவங்களுக்கு நன்றி சொன்னேன்.


ஆஹா நம்ம வலைப்பூவுக்கு இன்னொரு படம் கிடைச்சதுங்கற சந்தோஷத்துல அவங்க கிட்ட கேட்டு ஸ்கேன் பண்ணி வச்சு கிட்டேன்.

இதுவும் ஆயில் பெயிண்டிங்தான். ஆயில் பேப்பர்-ல போட்டது 30 cm x 20 cm அளவு.