Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, October 28, 2008

சித்திரம் செய்யும் வித்தைகள்

எதையும் வீணாக்க விரும்பாத குணம் மகாத்மா காந்திக்கு ரொம்பவே இருந்ததாம்.

நாம எல்லோரும் பென்ஸிலை சீவினா அதை கூராக்குவோம். ஆனால் காந்தியோ அப்படியே எழுத ஆரம்பிப்பாராம். “குடுங்க கூராக்கி தரேன்” அப்படின்னூ யாராவது சொன்னா “வேண்டாம் கூராக்கும் போது பென்ஸிலோட கரிப் பொடி வீணா போகும்” அப்படின்னு சொல்வாராம்.

வடநாட்டுல உடற்பயிற்சி கூடங்கள் எப்போதும் பிரபலம். ஆனால் காந்தி சொல்வாராம் ‘உடற்பயிற்சியில் மனித சக்தி வீணாகிறது. அதற்கு பதில் தோட்டம் போடுவது, துணி நெய்வது போல உடல் உழைப்புடன் கூடிய செயல்களில் ஈடுபட்டால் மனித சக்தி உற்பத்தியுடன் கூடிய பயனைத் தரும், ஆரோக்கியத்துக்கும் நல்லது’. என்ன நுணுக்கமா யோசனை பண்ணியிருக்காரு அந்த மனுஷன் !

கண்ணுக்கு தெரியற மாதிரி ரொம்ப பேரு வேஸ்ட் பண்றது சாப்பாட்டு விஷயத்துலதாங்க. அதை பத்தி சிந்திக்கற மாதிரி ஒரு பதிவு மஞ்சூரண்ணன் போட்டு இருக்காரு. நேரம் கெடக்கும் போது பாருங்க.

நம்ம விஷயத்திற்கு வருவோம். போன பதிவுல சிலேட்டுல செஞ்ச கைவேலையை பார்த்தோம். இன்னும் ஒண்ணு ரெண்டு இருக்கு. கைவசம் அதனோட படம் இல்லை. அப்புறம் பார்ப்போம்.

கீழே பார்க்கிற பிள்ளையார் படம் எங்கேயோ கெடச்ச ஆஸ்பெஸ்டாஸ் துண்டுல போட்டது. ஆயில் பெயிண்ட்டிங். எனக்கு நினைவு தெரிஞ்சு ரொம்ப வேகமா வரைஞ்சு முடிச்ச படம். ஆஸ்பெஸ்டாஸ் அப்படியே ஆயில் பெயிண்ட்டை உறிஞ்சிடுது. அதனால அதிக நேரம் காய காத்திருக்க வேண்டியதில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை மறைக்கிற மாதிரி பிண்ணணியில நல்லா அழுத்தமா கறுப்பு கலர் பூசி விட்டேன்.


இந்த படத்துல ரொம்ப பிடிச்ச விஷயம் தும்பிக்கைக்கு கீழே நிழலோட போக்கு. அப்படியே வளைஞ்சு பிள்ளையாரோட தொப்பையிலே கீழ் பார்த்த மாதிரி நிழலோட்டம் போகுதே அது தான்.



படம் போடறதுக்கு இப்படிபட்ட பேப்பர், இல்லை, கான்வாஸ்தான் வேணும்னு இல்லை.

நாம நம்ம ஜாலிக்காகத்தான போடறோம். அதனால கையில கிடைச்ச எதில வேணும்னாலும் போட்டு வெளையாடலாம்.

இரண்டரை அடி நீளம் மூணு அங்குலம் அகலத்துல தூக்கிப் போட கெடந்த ஒரு தெர்மோக்கோல் துண்டுல இப்ப எலிகளெல்லாம் ஜாலியா சங்கிலியில ஏறி இறங்கி விளையாடற மாதிரி ஒரு படம் போட்டு வீட்டுல சும்மானுச்சுக்கும் மாட்டி வச்சிருக்கேன்.

நாம நெனச்சா எதுவுமே ஆர்ட்தாங்க ! எப்பவோ காணாம போயிரு்ந்திருக்க வேண்டிய ஆஸ்பெஸ்டாஸ்ஸும் தெர்மோக்கோலும் துண்டெல்லாம் இன்னும் பத்திரமா இருக்குன்னா அது ‘சித்திரம் செய்யும் வித்தை’ தானுங்களே !

மிச்ச சரக்கை அடுத்த பதிவுக்கு ரிசர்வ் பண்ணி வச்சுக்குவோம்.

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Wednesday, October 8, 2008

கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும்

பள்ளிகூடத்தில எங்க வாத்தியாரு ஒருத்தரு சொன்னது அப்படியே மனசுல நின்னிடிச்சு.

”உபயோகமில்லாதவன்னு ஒருத்தனும் கிடையாது உபயோகமில்லாத பொருள்-ன்னு ஒண்ணும் கிடையாது.வேணும்னா நமக்கு பயன்படுத்திக்கத் தெரியலேன்னு வைச்சுக்கலாம்”

அப்போதிலிருந்து யாராவது ஏதாவது வேஸ்ட்டானப் பொருளை வச்சு இதை செய்யறாங்க அதை செய்யறாங்கன்னு தெரிஞ்சா அதை ரொம்ப ஆர்வமா பார்த்து, இல்லே படிச்சு தெரிஞ்சுக்குவேன்.

ஒரு தடவை உடைஞ்சு போன சிலேட்டு துண்டு கொஞ்சம் மனுசனோட மூக்கு மாதிரி தோணிச்சு. எங்கம்மா ஏதோ பத்திரிக்கையில வந்த ஒரு கட்டுரையில ஒரு பெண்மணி முட்டை மேல பெயிண்டிங், பழைய துணியில கைப்பை, சிலேட்டுல சிற்பம் எல்லாம் செய்யறாங்கன்னு எப்பவோ படிச்சு சொன்னது ஞாபகம் வந்திருச்சு. அதனால இதை வச்சு எதையாவது செய்யலாமேன்னு நினைச்சேன். சொன்னதுக்கும் நான் செஞ்சதுக்கும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷ இடைவெளி.

ஒரு சின்ன கத்தி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா ராவி மூக்குக்கு கீழே வாய்,முகவாய், கழுத்து எல்லாம் வர்ற மாதிரி செஞ்சேன். அப்புறம் தலைப்பக்கத்தை ஜடாமுடிபோல கத்தியோட கூர் பகுதியால கீறிவிட்டேன். முடிமேல ஒரு சின்ன வளைசல் கொடுத்து ஒரு பிறைச் சந்திரன். திருநீறு, கங்கை,கண்,கழுத்தில பாம்பு எல்லாமும் சிம்பிள் கீறல்கள்தான்.

இது சிவன்.கடைசியா நைஸான உப்புத்தாள் வச்சு ஓரத்தையெல்லாம் மழுங்க தேய்ச்சு விட்டேன். அவருடைய தலையில ஒரு சின்ன துளையை போட்டப்புறம் வால்-ஹாங் சிவனாயிட்டார்.


பல ஊர் மாற்றல்கள், வீடு மாற்றல்களுக்கிடையில் அதை பத்திரமா பாதுகாத்தது எங்கம்மாதான். குழந்தைகள் மேல உள்ள பாசம் அப்படி செய்ய வச்சது போலிருக்கு. அதனாலத்தான் முப்பது வருஷத்துக்கு பிறகும் அதை எல்லோருக்கும் காமிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாயிருக்கு. நல்லாயிருக்குன்னு நீங்க நெனச்சா அதோட முழு பெருமையும் அவங்களுக்குதான்.

சிவனார் கொடுத்த தைரியத்தில, சும்மா கிடந்த ஒரு முழு சிலேட்டையே எடுத்து குழலூதும் கிருஷ்ணரா செதுக்கிப் பார்த்தேன். மோசமில்லைன்னு எல்லோரும் சொன்னாங்க. இதுக்கு தேவைப்பட்டது ஒரு அகலமான திருப்புளி. அதுதாங்க ஸ்க்ரூடிரைவர். முளையைத் திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் உளி போன்ற அடிப்பக்கம் உடையது. அழகான செட்டிநாட்டு சொல்வழக்கு.

திருப்புளி வைத்து சுரண்டினால் சுற்றிலும் சிலேட் தூள் பறக்க, ”வெளியே போய் சுரண்டுடான்னு’ திட்டு வாங்கி வராண்டாவில் கிரிகெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டே சுரண்டி முடிச்சேன். இதிலே கவனிக்க வேண்டியது சுரண்டுற ஆழம் ஒரே அளவா இருக்கணும். ஒரு இடத்துல அதிகம் ஒரு இடத்துல கொறஞ்சு போகாம இருக்கணும்.

சிலேட் மேல் பகுதி ஒரே அளவு கறுப்பாக இல்லாமல் திட்டுத்திட்டா இருந்ததால கிருஷ்ணரையும் மாட்டையும் பார்த்தால் ல்யூகோடெர்மா வந்த மாதிரி இருந்தது.அப்போ தம்பி ஒரு ஐடியா குடுத்தான். ”ப்ளாக் கலர் ஷூபாலிஷ் தேச்சு விடு”. சரின்னு பாலிஷ் எடுத்து நல்லா அழுத்தி தேய்ச்சு ஒருவாட்டி ப்ரஷ்னால பளபளபாக்கி அந்த குறையையும் அட்ஜஸ்ட் பண்ணியாச்சு.
கடைசியா திரும்பவும் நடுவில வர்ற கோடுகளையெல்லாம் கீறி ஓரளவு ஆமா இது கிருஷ்ணர்தான்-ன்னு ஒத்துக்கற மாதிரி செஞ்சு வச்சேன்.

இப்போ படம் பிடிச்சப்பறம் பாத்தா இன்னொரு தடவை பாலிஷ் போடணுமோன்னு தோணுது. முப்பது வருஷம் ஆயிடுச்சே!!