Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, March 28, 2010

காஞ்சித் தலைவன்

இந்த மஹானின் படத்தை வரைந்து பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது. குறிப்பாக மணியம் செல்வன் அவரைப் பற்றிய ஒரு தொடரில் காஞ்சி பெரியவரின் வாழ்க்கை சித்திரமாக வரைந்த ஓவியங்கள் மனதில் இடம் பெற்றிருந்தன. அவை பெரும்பாலும் ஹாட்சிங் முறையில் வரையப்பட்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன் ஒரு பென்சில்-கறுப்பு வெள்ளை- வரை படம் முயற்சித்தேன். ஏனோ மனதிற்கு நிறைவாக வில்லை. மஹான்களுடைய அருள் இல்லாமல் அது முடியாது போலும் என்று நினைத்து விட்டு விட்டேன்.

போன வாரம் அவரது புகைப்படம் தாங்கிய ஒரு பத்திரிக்கை கண்முன்னே கிடந்தது. வாட்டர் கலர் பென்சிலும் கைவசம் தயாராக இருந்தது. கிடைத்த ஒரு அட்டையில் மள மள வென்று வரையத் துவங்கினேன். வழக்கம் போல் வர்ணப் பென்சில் எப்போதுமே ’டல்’ தான்.

அதற்காக வர்ணங்களை பென்சிலில் பூசிய பின் சின்ன பிரஷ்-ஐ தண்ணீரில் தோய்த்து சிறிது வாஷ் எஃபெக்ட் கொடுத்தேன். அது சற்று காய்ந்ததும் மீண்டும் வர்ணங்களை எங்கெங்கு தேவையோ அங்கே சற்று அழுத்தமாக வரைந்தேன். இப்போது முன்பை விட படம் சற்றே பளிச் என்று வந்தது. இதற்கு மேலும் ‘பளிச்’ செய்யப்போனால் கெட்டு போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டு விட்டேன்.



பெரும்பாலானவர்கள் நன்றாக வந்திருக்கிறது என்று கூறிய தைரியத்தில் வலையேற்றத் துணிந்தேன்.

இம்முறை சற்று குரு அருள் துணை நின்றது போலும் . குறைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

பட்டினத்தார் பாடியது போல “.....எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனீரே”