Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, August 28, 2011

பாரத் மாதா கீ ஜெய் !!

கள்ளம் கபடமில்லா சிறுவர்களை சேவை மனப்பான்மையோடும் தியாக புத்தியுடனும் வளர்த்தால் நற்சிந்தனையுடன் கூடிய குடிமக்கள் உருவாவர் என்ற எண்ணத்துடன் 1909-ல் துவங்கப்பட்டது சாரணர் இயக்கம். இன்று ஏனோ தானோவென நடந்து வருகிறது.

முதன்முறையாக சாரணச் சிறுவர்களை நான் கண்டது திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பலவிதமான சேவைகள் செய்யும் போது தான். அப்போது நானும் அவர்களைப் போன்ற சிறுவன். ஆதலால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கழுத்தில் மஞ்சள் வர்ணத்தில் ஸ்கார்ஃப் போட்டுக் கொண்டு காக்கி உடையில் அவர்கள் சுறுசுறுப்பாக கூட்டத்தை இயக்கிய விதம் மனதில் நின்று விட்டது.

நான் படித்த ஆறு பள்ளிக்கூடங்கள் எதிலும் சாரணர் திட்டம் இடம் பெறவில்லை. ஒரே வருடம் NCC-ல் பொறுப்பில்லா முறையில் நான்கு அல்லது ஐந்து வகுப்புகளே நடந்தன. அப்போதே டிபன் காப்பி கள்ளக் கணக்கு எழுதவதற்கு நடத்தப்படும் வகுப்புகள் என்ற பேச்சு பரவலாக அடிபட்டதுண்டு. இந்த சூழ்நிலையில் நல்ல குடிமக்கள் உருவாகுவதெங்கே ? :(



காலண்டரில் கண்ட சாரணச் சிறுவனின் கள்ளமில்லா சிரிப்பிற்கு விழுந்து போன பல்லினால் உண்டாகிய இடுக்கு மேலும் அழகு கூட்டுவது போல் தோன்றியது.

உடனே என்னுடைய சிரிப்பு சீரீஸ்-க்கு சேர்த்து விடுவது என்று முடிவு கட்டி வரைந்து முடித்தேன். சாரணர்களைப் பற்றி சிறு குறிப்பு சேர்க்கலாம் என்று எண்ணி வலைப்பக்கங்களைப் படித்து முடிக்கும் தருவாயில் படம் தரும் திருப்தியை விட நாடு ஏன் இப்படி தர்மத்தின் வலுவின்றி குன்றிக் கிடக்கிறது என்ற நிராசையே மேலோங்கி நிற்கிறது.

உண்மையான சாரணர்களை உருவாக்கி இருந்தால் நம் நாடு இப்படி அதர்மத்தின் பால் சிக்கிக் கொண்டு தவிக்குமா ! இதோ அவர்களுக்கான கொள்கையும் விதிமுறைகளையும் பாருங்கள்.

சாரணர் உறுதி மொழி:
என் முழு மூச்சுடன் இறைவனுக்கும் என் தேசத்திற்கும் உரிய கடமைகளை தவறாது செய்யவும் அனைத்து மக்களுக்கு உதவி செய்யவும், எல்லா நேரங்களிலும் சாரணர் விதிகளை கடைபிடிக்கவும் சத்தியப் பிரமாணம் செய்கிறேன்.

சாரணர் விதிகள்:
1) சாரணன் நம்பிக்கைக்குரியவன்
2) சாரணன் உண்மையுள்ளவன்
3) சாரணன் யாவருக்கும் நண்பன்; பிற சாரணர்க்கு சகோதரன்
4) சாரணன் பணிவுடையவன்
5) சாரணன் பிற ஜீவராசிகளுக்குத் துணைவன், இயற்கையை நேசிப்பவன்
6) சாரணன் கட்டுப்பாடு மிக்கவன், பொது நலச் சொத்துகளைக் காக்க துணை செய்பவன்
7) சாரணன் அஞ்சாநெஞ்சன்
8) சாரணன் சிக்கனமானவன்
9) சாரணன் எண்ணத்தில்,சொல்லில் மற்றும் நடத்தையில் பரிசுத்தமானவன்


பல நல்ல விஷயங்கள் திட்டங்கள் இருந்தும் ஏன் செயற்படுத்துவதில் தவறி விடுகிறோம் ? டிபனுக்கு கள்ளக் கணக்கு எழுதுவதால் இருக்குமோ!

வேலியே பயிரை மேயுது.

பாரத் மாதா கீ ஜெய் !!